Monthly Archives: திசெம்பர் 2011

நீல் வானம் ஒதுங்கியோட மழை மேகம் கருக்கட்டும்

பதிவின் வடிவம்

நீல் வானில் கருமேகம் கருக்கொள்ளல்

நீல் வானம் மனதுடைந்து
ஒதுங்கியோட
நடு வானில் மழை மேகம்
கருக்கட்டும்.
அது கனிந்து மழைநீரைப்
பொழிந்தாலும்
இவர் வீட்டில் ஒரு சொட்டு நீரெனும்
தரையிறங்காது.
குழாய் நீர் மனமிரங்காத போது
அடிகழுவும் நீர் கூடச்
சொட்டாது
நகர் வாழ்வில் காசின்றி எதுவேனும்
கிட்டாது.

எம்.கே.முருகானந்தன்.

நத்தார் வாழ்த்துக்கள் மற்றும் மணற்காடு தேவாலயம்

பதிவின் வடிவம்
நண்பர்கள் அனைவருக்கும் எனது
இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்
நத்தார் வாழ்த்துக்கள்
இந்த மகிழ்ச்சியான நாளில் ஒரு இனிய கிறீஸ்தவ கீதம்.
எத்தனை முறை கேட்டாலும் மனத்தை நிறைக்கும் பாடல்

அலை தடவும் கடலோரம்
தரையெல்லாம் மணல் குவிந்து
குன்றாகும்
மணல்காட்டின்
நடுவே தலை நிமிர்ந்து
அருள் சொரியும்
யேசுபிரான்
வெயில் சாயும் ஒருவேளை
என் கமரொவிற்கும்
அருள் புரிந்தான்.
சென்ற ஆண்டு யாழ்ப்பாணம் சென்றபோது மணற்காடு கிராமத்திற்கு செல்லக் கிடைத்தது. சிறிய கரையோரக் கிராமம். பெரும்பாலும் கத்தோலிக்க கிறீஸ்தவர்கள். மிகவும் அன்பும், கனிவும் கொண்டவர்கள். கடற்தொழில்தான் பிரதான தொழில்.
மணற்காடு தேவாலயம்
கடற்கரைக்குச் சென்று திரும்பும்போது சேர்ச் அருகே வந்தோம். பிரமாண்டமான அழகிய தேவாலயம். எதிரே பெரிய மைதானம். அதில் இளைஞர்கள் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தனர்.
மணற்காடு தேவாலயம்

சென்ற தலைமுறையினர் எனக்கு நன்கு பழக்கமானவர்கள். ஆபிரகாம், பெனடிக்ட், திரேசா… இப்படி எத்தனையோ பெயர்கள் இன்றும் மனத்தில் நிறைந்து நிற்கிறது. இவர்களில் பெரும்பாலனவர்கள் இன்று இல்லை. அல்லது புலம்பெயர்ந்து சென்றுவிட்டார்கள்.

ஆயினும் சென்ற 10-15 வருடங்களாக பருத்தித்துறையில் நான் இருக்கவில்லை, மருத்துவப் பணியாற்றவில்லை. இதனால் அங்கிருந்த இளைஞர்களை என்னால் அடையாளம் காண முடியவில்லை.

மணற்காடு தேவாலய வாயிற் கதவு

தேவாலய முன்றலுக்கு வந்தோம். வாயிற் கதவு சாத்தியிருந்தது.

“கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் ..” பாடல் ஞாபகத்தில் வந்தது. ஆயினும் தட்டிப் பார்க்கவில்லை.

வெளியே நின்றபடியே சில படங்கள் எடுத்துக்கொண்டோம்.

மணற்காடு தேவாலயம்

இந்தப் புனிதமான இனிய நாளில் அந்தக் கோவிலும் அந்த மக்களும் மனதில் நிறைந்து நிற்கின்றனர்.

சுனாமியால் அந்த மக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். பலர் மரணித்தனர். ஆயினும் அந்த மக்கள் துவண்டுவிடவில்லை. மீண்டு எழுந்தனர். தமது கிராமத்தை மீள அமைத்தனர். அந்த தேவாலயம் பாதிப்புறவில்லை.
இப்பொழுது புதிதாக வர்ணமடிக்கபட்டு கவர்ச்சியாக இருக்கிறது.

மணற்காட்டைச் சார்ந்த
அந்த இனிய மக்களுக்கும் 
எனது ஏனைய அனைத்து நண்பர்களுக்கும் 
இனிய நத்தார் தின வாழ்த்துக்களும், 
வரப்போகின்ற புத்தாண்டிற்கான 
வாழ்த்துக்களும்.
0.0.0.0.0.0

மறைந்திருப்பதின் சுவை

பதிவின் வடிவம்

Beauty of Concealment

மறைத்தலின் அழகு

ஒளிப்பின்றி வெளிச்சமிட்டுக்

காட்டலில் கிட்டுவதே இல்லை

சுவைத்தலும் அவ்வாறே

கும்மிருட்டில்

ஒளித்திருந்தும்

அதன் சுவை

தேனிலும் இனிக்கும்.

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

மலை மீது அலையாக வளி வீச அதனோடு இசைந்தாடும் ….

பதிவின் வடிவம்

Dancing to winds tune

மலைமீது அலையாக வளி வீசும்

குழலூதும் இசையாக ஒலி பிறக்கும்

வானெங்கும் எதிரொலிக்கும் அதன் கீதம்.

நாதத்தில் மதி மயங்கி

அடங்காத மனம்போலத் திமிரோடு

அழகாக இசைந்தாடும் தாவரங்கள்.

அணங்காக சதிராடும்

அவைநடுவே

மண்பாதை

வளைந்தொழிந்து

நளினமாக பொடிநடைப்

பயணம் செய்யும்

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

கார்த்திகை விளக்கீடு

பதிவின் வடிவம்

கார்த்திகை விளக்கீடு

பனம் பாளை தேடி
பவிசாகச் சீவியெடுத்து
பழம் துணியை அதன் தலையிற் சுற்றி
எண்ணெயில் தோய்த்து
பந்தம் ஏற்றிய காலமெல்லாம்
கனவாகிப் போக
மாடிவீட்டின்
பல்கணியில்
தீபமேத்தி
அமைதி காணும் காலம் ஆச்சு
அடுத்த வீட்டு தீபமும் காட்சியாச்சு.

0.0.0.0.0.0.0

படங்களின் முன் கிளிக் பண்ணி பெரிதுபடுத்திப் பார்க்கவும்.

எம்.கே.முருகானந்தன்

அடைபட்ட செடிகளின் ஒளி தேடும் அலைச்சல்.

பதிவின் வடிவம்

எட்டிப் பார்த்தல்

ஒட்டுப் பார்ப்பது சுதந்திரத்தை நிந்திக்கும் விடுப்பு
எட்டிப் பார்ப்பது ஆமைத் தலையின் சுற்றுலா.
தப்பப் பார்த்தல் சிறைபட்ட கைதியின் விடுதலை
வளைந்து பார்த்தல் அடைபட்ட செடிகளின்
ஒளிப் பசி தேடும் அலைச்சல்.

எம்.கே.முருகானந்தன்

மனங் கிறங்க வைக்கும் அரளி உயிர் பிரிக்கவும்…

பதிவின் வடிவம்

அலரியா அரளியா

ஆறாத புண் ஆற்றும் அரளி என
நாவாராப் புகழும் இத் தாவரம்
சாவெனக்கு வேண்டும்
இனி வாழ்வெதற்கு
மாண்டு மறுவுலகு புக
நாடுவோர்க்கும்
அருமருந்தாகும்
உயிர் துறக்க….

எம்.கே.முருகானந்தன்