Monthly Archives: பிப்ரவரி 2012

வனத்திடை கால் பதித்து…..

பதிவின் வடிவம்

வனத்திடை கால் பதித்து

மத மரங்களின் பின்னொளிந்து

செம்மண் புழுவென மெதுவூர்ந்து

தரையரைய முன்நகர்ந்து

இரைதேடித் தன் பசியடக்க,

நதியோரம் வந்தடையும்

புள்ளிமான் உடல் குதறித்

தானுண்ணக் காத்திருக்கும்

குள்ளநரி நானல்ல

மலரிடை விழி தவள..

மலரிடை விழி தவள

சீதளத் தளிர்களில் மெய் நனைய

சிரசினில் கெவர் மோத

பசுங் கொடிகளில் கரங் கொழுவ

நினைவினில் கனவலைய

அழகினைப் பூஜித்து

இப்பூவுலகில் சொர்க்கம் இதுவோ,

இன்னும் உண்டோவெனத்

தேடியலையும்

பேராசைப் பயல் யான்…

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0.0.0

Advertisements

தென்னையும் பனையும் வேம்பும் வான் அளையக்..

பதிவின் வடிவம்

தென்னையும் பனையும்
நெடு வளர்ந்து
வேம்புடன் இணை சேர்ந்து
வான் அளையக் கை நீட்டும்.
மலைவேம்பு  இலையசைத்து
நலமா எனச் சுகம் கேட்கும்.
இலை சுருட்டிக் குழலாக்கி
விசில் ஊதப்
பூவரசு சிரசசைத்து
வரவேற்கும்

வெண்மேகம் திமிர் பிடித்து
விரைந்தோடும்
வான் எட்ட.
கைக்கெட்டாது ஒருபோதும்
அதுவென உணராது.
உயர்ந்தேகும் வெண் மஞ்சு
குளிர் காற்றால்
உடல் கறுத்துத்
தரையிறங்கும்.

தெருவெங்கும் பாய்ந்தோடும்
மழைநீரில் கால் அளைந்து
விளையாடிய காலமதில்
கடதாசி அகப்பட்டால்
அதை மடித்துக் கப்பலாக்கி
தொலைபயணம் புறப்படுவோம்
கற்பனைக் கடல் மீதே.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0.0