Monthly Archives: ஏப்ரல் 2012

வேலிக் கூடெல்லாம் பிழாக்கள் போத்தல்

பதிவின் வடிவம்

கள்ளுண்போர் காட்சி- யாழ்ப்பாணன் கவிதை

நாடெலாம் கள்ளின் நாற்றம்
நாற்றிசை சூழும் வேலிக்
கூடெல்லாம் பிழாக்கள் போத்தல்
குடியர்களங்கு கூடித்
தேடிய பொருளை யெல்லாம்ஞ்
சிதைத்தவர் குடித்தலாலே
சாடியா உந்தி வீங்கும்
சதமுமிக் காட்சி காண்பீர்.

மதுவினைக் குடித்து மாந்தி
வழியெலாம் ஆட்டம் போட்டு
எதிர்வரும் மக்களோடும்
எந்திரம் பலவற்றோடும்
நிதமுமே மோதி நிற்பார்
நலத்தினிற் புரள்வர் அன்னார்.
விதவிதக் காட்சி காட்டி
வேடிக்கை செய்வர் மன்னோ.

கோயிலிற் குடியர் கூட்டம்
குளத்தினிற் குடியர் கூட்டம்
வாயிலிற் குடியர் கூட்டம்
வழியெலாங் குடியர் கூட்டம்
நாயெனத் திரியும் கூட்டம்
நரியெனத் திரியும் கூட்டம்
பேயனெத் திரியும் கூட்டம்
பெருகுதல் நாளும் காண்பீர்.

எனது ஊரான வியாபாரிமூலையைச் சேர்ந்த

மறைந்த கவிஞர் யாழ்ப்பாணன் எழுதிய கவிதை இது.

1951ம் ஆண்டு வெளியான அவரது கவிகை் கன்னி  நூலிலிருந்து

அவர் எழுதிய மேலும் இரு கவிதைகளுக்கான இணைப்பு.

சூரியோதயம் – யாழ்ப்பாணன் கவிதை

ஜீவ இரக்கம் கவிஞர் யாழ்ப்பாணன் பாடல்

மஞ்சுகளின் கொஞ்சலை விஞ்சுகிற பறையொலி

பதிவின் வடிவம்

மஞ்சுகளின் கொஞ்சல்

மஞ்சுகளின் கொஞ்சல்

 கண்ணனின் வர்ணமென பரவுகின்ற
வண்ணப் பெருந்திரையில்
வெண்ணாடை  தழுவ
மெல்லெனத் மிதந்து நீயும்
தவழ்கின்ற காட்சி கண்டேன்.

உன்னருகில் அணைய வந்த
பஞ்சனைய மஞ்சின்
வதனமொடு வதனம் மேவி
உதட்டுடன் உதடுகள்
வேட்கையொடு
கெளவியபோது
உன்னருகில் என்னை நானும்
உருவகித்து விண்ணில்
பரவசவித்து மிதந்தேன் .

மீண்டுமொருக்கால்
முத்தமிடும் எண்ணம்
மூர்க்கமாய் எழுந்தபோது
அடிவயிறு பிசுபிசுக்க
அரியண்டமுடன்
அதைத் துடைக்க
ஊர்ந்தன கைகள்.

‘பாட்டாவிற்கு பாயுடன்
மூத்திரம் போட்டுது’
பேரனின் கூவல் ஊரெழுப்பக்
கலைந்தது கனவு.

படுக்கையில் முடங்கிய வாழ்வு
பாடாய்ப் படுத்துகிறது.
பாடையில் செல்லும் வேளை
விரைந்தென்னை தழுவாதோ
ஏங்கி ஒடுங்கப்
பாசமுடன் அழைத்தது
பறையொலி என்னை.

எம்.கே.முருகானந்தன்

கழித்த சனியனை தலையிற் சுமத்தும் வம்போ

பதிவின் வடிவம்

படைத்த சோற்றில் எனக்கும் பங்கோ
கழித்த சனியனை தலையிற் சுமத்தும் வம்போ
ஒழித்தென்னை மாய்க்க வைத்த நஞ்சோ
எதற்கும் சற்று அவதானமாயிருதல் நன்று
மானிடரை நம்பல் முடியாது.

எம்.கே.முருகானந்தன்

இலைமீது படிந்திற்ற மாசகற்ற மழை நீரால் ….

பதிவின் வடிவம்

மாநாகரின் தெருநிறைத்து
வாகனங்கள்
பொழுதடங்க ஓடும்.
அது உண்டு கழித்திட்ட
கருவாயு குதம் பிரிந்து
வளி எங்கும் நோய் கொடுக்கப் பரவும்.

உயிர்வாழ
மாசுண்ணும் தாவரங்கள்
உயிர் வாய்வை
வளியெங்கும்
இரவெல்லாம் நிறைக்கும்.
அதைச் சுவாசிக்கும் உயிரினங்கள்
களிகொண்டு
பலவாகப் பெருகும்.

மிதந்தெழுந்த குளிர்காற்று
வெண்முகிலைத் தழுவ
சூல் கொண்டு கரு தாங்கி
மழைமேகம் ஆகும்.
அது பொழிந்த மழைநீரால்
பூவுலகு செழித்தோங்கி வாழும்.

தெருத்தூசி படிந்து அழுக்குறையும்
கொடி செடியின் மாசகற்ற
மழை நீரால் முடியும்.
அகமெங்கும் மாசுற்று
தூஷணையைப் பொழியும்
பாழ் மனம் தன்னைச்
சீர் செய்ய இங்கெவர்க்கு முடியும்?

மனதொடுக்கும் உளப் பயிற்சி
மனதூண்றிக் கைப்பிடித்தால்
உலகுள்ள உளமனைத்தும்
நிர்மலமாய் ஒளிரும்.

0.0.0.0.0.0.0

எம்.கே.முருகானந்தன்.