Monthly Archives: மே 2012

காகக்திற்கு அன்னம் வைத்தல்

பதிவின் வடிவம்

காகத்திற்கு வைத்தல்

காகக்திற்கு அன்னம் வைத்தல்
காலாகாலமாக நம் வழக்கம்
சின்னதாக வாழையிலையில்
செஞ்சோறு கறியுடன், வடை மோர் மிளகாய்ப் பொரியல்
பப்படம் பாயாசம் தயிர் என அழகாய்ப் படைத்து
கா காக் கீச்சுக் குரலில்
காகம் போலக் கரைகுரலெடுத்து
ஊரெங்கும் கேட்க உயர்த்தி வாசிக்க
காகங்கள் கூட்டமாக விருந்துண்ட
காலமெல்லாம்
மறந்துபோன கதைகளில்தான்.

இன்றோ ?
மாடிவீட்டில் மசுங்கி மசுங்கி
கீழ் வீட்டார் தலையில்
அபிசேகமாகுமா பதைபதைப்புடன்
லன்ஞ் பேப்பரில் சுட்டி வைத்ததை
சாப்பிட வருவாராவென
அவதியோடு பார்த்திருந்தும்
காகங்கள் பிசியோ பிசி
காணவில்லை அருகெங்கும்.

காகங்கள் காணாதொழிந்ததில்
கொண்டாட்டம் எறுப்புகளுக்காம்
பெரும் கூட்டாக வந்து விருந்துண்டபோதும்
மிஞ்சிக் கிடக்கிறதாம் உணவின்னும்
அருமந்த மனைவியார்
நசுக்கிடாது நக்கலடிக்கிறார்.

எம்.கே.முருகானந்தன்.

வாடிச் சரிந்த அம் மலருக்கு பிரியாவிடை

பதிவின் வடிவம்

வாடிச் சரிந்த அம் மலருக்கு பிரியாவிடை!!!!

வாடிய மலர்

வாடிச் சரிந்தது அம் மலர்
தனக்கே உவப்பான தடத்தில் நடந்து
தனக்கென விதிக்கப்பட்ட பொழுதில்
வான் தகிக்கும் கோடை நாளில்
கூர்விழிகள் தாமே சோர
செந்நிற இதழ்களை மெல்லென மூடி
அமைதி கொண்டது.

பூரித்து இதழ் விரித்து
முழுமையாயது மலர்ந்த நாள் இனியது.
செழுமையான வண்ணங்கள் பிரகாசமாக ஒளிர்ந்தன!
தேனினை நாணவைத்தது அதன் இனிமை
வாசனை பூமியெங்கும் கமகமத்தது.
வடிவ நேர்த்தியில்
சிற்பியின் கைவண்ணம் ஒளிர்ந்தது.

மனிதரும் மலரனைய மென்மையுடன்
வாழலாமென இலக்கணம் வகுத்தது.
அன்பு கருணை இரக்கம்
அருவியெனப் பொழிந்ததது
அம் மலரிருந்து.

தன்துயர் மறைத்து
மற்றோர் நினைவுகளில் களிகொள நீந்தியது
மன்னுயிர்கள் மகிழத் தியாகங்கள் பொழிந்தது
பிற சாவுகளைத் தன் பணியால்
காத்துப் பிழைக்க வைத்தது.
இன்று அது சாய்ந்து வீழ்ந்தது.
ஆனால் கருகிச் சாம்பராகவில்லை
காற்றாகக் கரைந்துவிடவில்லை.

விதைத்த விதைகள் வீர்யமானவை
வீறுகொண்டெழல் நியதி.
அன்பு, அமைதி, நல்லிணக்கம்
மற்றும் மகிழ்ச்சியென
புத்துலகில் புது மலராக
துளிர்விடும் நாள்
தொலைவில் இல்லை.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0

சுப்பர் மடச் சுடுகாடு

பதிவின் வடிவம்

எங்கப்பரின் அப்பர் அவரின் அப்பரென
அடியடியாக
இச் சுப்பர் மடச் சுடுகாட்டில்
தணலடங்கச் சாம்பராயினர்

முருகைக்கல்
அணை காக்கும்
பாக்குத் தொடுவாய்
கரை நீரில் சங்கமாகி
இந்துமாக் கடலேகி
உலகளந்தனர்.

செகண்ட் ஷோ முடிந்தவேளை
ஜாலியாகச் சத்தமிட்டு
ஜோலியான பகடிகளும்
கழுதை நாணும் பாடல்களுடன்
டபிளோடி வரும்வேளை
எரிதணலில் எழுந்திருப்பார்
சிதையெரியும் பிணம்
கெலி கெளவி சிறுநீர் சிந்த
விரைந்தோடியது
ஒருகாலம்.

சண்டையில் சவுக்களுடன்
சனங்களும் காணாமல் போயினர்
எரித்தலுக்கு சுடுகாடு
செல்லத் தடையாயிற்று.
நெடுதுயர்ந்த சவுக்கமரங்கள்
நிழல் கொடுத்த காலம்
கனவாயிற்று.

பின்னொருகால் மீண்ட வேளை
மீந்திருந்தது உடைந்த சுவர்களும்
இடிந்த மண்டபங்களும்
எம் கனவுகள் போல்
சிதைந்தே கிடந்தன .

ஊர் பிரிந்து உறவிழந்து
பிறதேசம் புகலானோர்
மீண்டொருகால் தம்தேசம் வருவாரோ
சிதையெரிய சுப்பர் மட
சுடுகாட்டில் அவர்க்கு
இடமுண்டோ?

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

மஞ்சளும் காவியும் சில சிந்தனைகள்..

பதிவின் வடிவம்

இஞ்சரும் இனிவேண்டா

இகவாழ்வு எனக்கென

சஞ்சலம் குடிகொள்ள

சிந்தனை சலித்து

சிவனேயெனக்

கானகம்  நாடும்

ஞானியர் பூணும்

வண்ணவேடமது

மஞ்சளும் காவியும்தான்.

0.0

எனக்கெதற்கு இவையென எண்ணி

ஒதுங்கி மருளு வேண்டா

இன்னமும் பல இதமான சங்கதிகளும்

மஞ்சளும் காவியுமுள்ளே கரந்துள.

0.0

எத்தனை நிறம் இங்கிருந்தாலும்

அத்தனையும் அள்ளி அலங்கரிக்கும்

நந்தன வனிதையர்

நாடும் மங்களங்களிலும்

இவையனைத்தும்

கோலமிடும்.

0.0.0

மத உரிமை பறித்து,

மசூதி தகர்க்க வன்மை ஓதியதில்

வண்ணத்தின் மாண்பு குலைந்து போனது

இருந்தபோதும் அதை

அலங்கோலமென நிந்தித்தல் அழகல்ல

பதர்களிடையே பயனுறு மூலிகை போலப்

புனிதர்கள் எங்கும் உண்டு

0.0.0

நித்தமும் நாமுண்ணும்

அத்தனை உணவுகளும்

சுத்தமாய் ஜீரணித்து

எச்சமாக வருவதும்

மஞ்சளும் காவியுமாகவே.

0.0.0

நிறங்களோ ரைந்துடையாய்

மறைந்திருந்தாய் எம்பெருமானெனப்

போற்றிப் பரவிடினும்

 சிகப்பு, மஞ்சள், நீலம் என

வண்ணங்கள் மூன்றே அடிப்படையிலென

விஞ்ஞானம் கூறிடுதே

காவி அங்கு மாயாமானதே.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

விறைத்தெழுந்து வருவாய் ..

பதிவின் வடிவம்

விறைத்தெழுந்து வருவாயென

உளக் கிளர்ச்சியுடன் காத்திருந்தேன்

நிமிர்ந்தெழத் திராணியற்று

சோர்ந்து கிடக்கின்றாய்.

விறைத்தல் செயற் பிறழ்ச்சி

Erectile Dysfunction

மனவிருப்பிருந்தால்

சோரேன் எனும் திடமிருந்தால்

வாழ்க்கை சொர்க்கமாகும்.

Erectile dysfunction விறைத்தெழும் செயல் பிறழ்ச்சி

ஆண்மைக் குறைபாடு கிளிக் பண்ணுங்கள்.

இது 2008 ல் எழுதிய கட்டுரை.

புதிய கட்டுரை விரைவில் வரும்

00.00