Monthly Archives: ஓகஸ்ட் 2012

மழை சொரியும் ஓரிரவில் . . .

பதிவின் வடிவம்

மழை சொரியும் ஓரிரவில்

இரை வாங்கக்

கடை தேடி

தெருவோரம்

பொடி நடையில்

நகர்ந்தேன்.

விசர்பிடித்து ஓலமிட்டு

சிலிர்த்தடித்து வீறிட்டு

புற முதுகில் உதை பரப்பி

தரை சாய்க்க

பெரு மூச்செடுத்து

வீசிற்று

ஊழிப் பெருங்காற்று.

குடல் கிளப்பி உடல் நடுக்கும்

குளிர் விறைக்க,

எனைக் காக்க

மறைதேட முனைந்தேன்.

தெரு நிரப்பி மடை பாயும்

கழி நீரை சொரிந்திறைத்து

எனை மடக்கி நோய் திணிக்க

விரைந்து ஓடோடி

வந்திற்று மற்றொன்று


 வரும் காரின் கடு வேகம்

கதி கலக்கி குசுப் பாற

உயிர் பிழைக்கப் பாய்ந்தோடி

மூச்சொடுங்க உட்பாய்ந்தேன்

திறீ வீலர்  ஒன்றில்.

அந்நேரம் அம் மழையில்

தமைக்காக்க

தெருநீளம் கலைந்தோடி

புகல் தேடும் சனம் காணச்

சிரிப்பெனக்கு வருமோ?

ஒரு நாளில் ஒரு இரவில்

ஊரிழந்து, உறவழிந்து

உறை பிரிந்த உறவுகள்

பரதேசித் தெருநாய்போல

தலைசாய்க்க வழியின்றி

திரிந்தலைந்த வேளை

தெருக் குப்பையென கூட்டியள்ளி

முகாம் அடைத்த பெரும் துயரம்

நினைவிருக்க,

எம்வாழ்வில் என்றேனும்

முகம் மலர விட்டிடுமோ?

-: எம்.கே.முருகானந்தன் :-

ஜீவநதி சஞ்சிகையிலும் எனது ‘மறந்துபோகாத சில’ புளக்கிலும் வெளியானது.

கபரகொயா kabaragoya தமிழில் என்ன?

படம்

கபரகொயா எனப்படும் ஊரும் வகையான ஜந்து இலங்கையின் தென் பகுதிகளில் காணப்படுகிறது. பல்லி,ஓணான், உடும்பு போன்ற ஊரும் பிராணிகளில் ஒன்று.

நான் நோயாளர்களை பார்க்கும் Mediquick சென்று திரும்பும்போது Canal லின் எதிர்புறமாக St Peters College Grounds அணித்தாக இவர் ஊர்ந்து செல்வதைக் கண்டேன. விரைந்தோடி மறைந்துவிடுவார் என்ற பயத்தில் வாகனத்தில் இருந்து குதிதோடி எடுத்த படம் இது.

வெயில் எதிர்ப்புறமாக அடித்துக் கொண்டிருந்ததால் சிறப்பாக எடுக்க முடியவில்லை.

Asian water monitor என அழைக்கப்படும் இது இலங்கையில் மட்டுமே காணப்படுவதாகச் சொல்கிறார்கள். சிங்களத்தில் கபரகொயா எனும் இதை நீர் உடும்பு என்று தமிழில் சொல்லலாமா?

knob-nosed lizard அல்லது  hump-nosed lizard எனவும் அழைப்பதாகப் படித்தேன்.

சலமந்தரா என இணையத்தில் ஒருவர் எழுதியிருந்தார்.

இது நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் வாழும். புதிதாகப் பார்ப்பவர்கள் இதனை முதலை என எண்ணக் கூடும்.

பொதுவாக சாதுவான மிருகங்கள். ஆனால் கோபமூட்டப்படால் தங்கள் வாலால் அடிக்கவும், நகங்களால் கிழக்கவும், பல்லினால் கடித்துக் குதறவும் செய்யும்.

நீந்தக் கூடியவை. தமது வாலிலுள்ள துடுப்பு போன்ற பகுதியை பயன்படுத்தி நன்றாக நீந்தும். மீன், தவளை, எலி, பறவைகள். நண்டு, பாம்பு போன்றவற்றை உண்ணும்.

0.0.0.0.0.0

காக்கைள் கரைதல் வெற்றுப் பேச்சல்ல….

படம்

ஒரு திரை சீலை விரிகிறது
மைதானத்தில் அரங்கு திறக்கிறது
வானத்தில் வட்டமிடல் தவிர்தது
தரையில் கூடினர்

காக்கைளில் நாடாளுமன்றம்

ஒரு பருந்து விரட்டி யடித்தால்
ஒளிந்து மறைவதற்காய் கூடியதல்ல.
கா கா கா
சூரியனின் வெம்மை துரத்தவும் இல்லை
மரங்களில் நிழலணைய
கிளைகளின் சீதளத்தில்
துயிலுறவும் அல்ல.
கா கா கா
இது கவலையின் விம்மலல்ல
ஏக்கத்தின் கரைதலுமல்ல
விரக்தியின் வெம்பலுமல்ல
கா கா கா

கா கா கா
தேவையின் கூடல்
தம்மில் கூடி கரைந்து பேசி
கிடைத்த உணவைப் பகிர்ந்து
மகிழ்ந்து உண்டு
மனிதனுக்கு செய்தி சொல்வதற்கான கூடல்

‘ஏ மனிதர்களே பிரிந்து நின்று
சுடு சொல் வீசாதீர்
நிந்தனை செய்யாதீர்,
குடுமி பிடித்துக் கொல்லாதீர்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’

மனிதப் பருந்துகளும்
வல்லூறுகளும்
இனத்தின் பேரால்
மதத்தைச் சொல்லி
சாதியைக் காட்டி
சகமனிதனையே
தின்று ஜீரணித்து
ஏப்பமிடக் காத்திருக்கின்றன.

காக்கைள் கரைதல்
வெற்றுப் பேச்சல்ல
கவனத்தில் கொள்ளுங்கள்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

ஒழுங்கையில் மிகச் சிறிய தொங்குபாலம்

படம்

இது ஒரு குட்டி தொங்கு பாலம்.

உலகத்தின் மிகச் சிறிய தொங்குபாலம் என அழைக்கபட வேண்டும் என உலக நாடுகளைக் கோருகிறது.

கட்டியவர் பஸன் பழச் செடியார்.

இதில் பயணிப்பதற்கு எறும்புகளுக்கு மட்டுமே அனுமதி உணடாம்.

உலகிலேயே மிகவும் நீளமான, உயரமான தொங்கு பாலம் ஒன்றை சீனா கட்டியுள்ளதாம். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் அன்ஹியாட் நகரில் மிகவும் உயரமான மலைத்தொடர்கள் உள்ளன. இங்குள்ள இரு மலைத்தொடர்களையும் இணைக்கும் வகையில் தொங்கு பாலம் கட்டப்பட்டுள்ளதாம். மொத்தம் 1,102 அடி நீளம் உள்ள இந்த தொங்கு பாலம், 3,858 அடி உயரமும் கொண்ட இரு மலைத் தொடர்களுக்கிடையே பிரம்மாண்டமாக கட்டப்பட்டி முடிக்கப்பட்டுள்ளது.

யாருடைய முயற்சி பிரமாண்டமானது.

தன்னதுதான் என மார் தட்டுகிறது பஸன் பழச் செடி.

0.0.0.0.0.0