Monthly Archives: மார்ச் 2013

புறா விடு தூதும் வேண்டாது கிட்டிய வரமும்

பதிவின் வடிவம்

புறா விடு தூது…
மயில் விடு தூது…
மான் விடு தூது…
அன்னம் விடு தூது..
நாரை விடு தூது
வண்டு விடு தூது
காலமெல்லாம்
காலாவதியாகிவிட்டது

இது!
ஓட்டோவிடு தூது
கார் விடுதூது
ப்ளையிங் கிஸ் விடுதூது
பஸ்சில் இடிவிடு தூது
எஸ்எம்எஸ் விடு தூது
ஈமெயில் விடுதூது
என்றாக ஆகிவிட்டது

தூது எதுவும்
விடவில்லை
மேல் வீட்டில் வந்திருந்து
நோட்டமிடுபவரை
நோட்டமிடுகிறேன்
நான்.

அரிசி பருப்பு ஏதேனும்
சிந்தியிருக்கிறதோ
பூச்சாடிக்குள் பூச்சி புளு
மறைந்திருக்கிறதோ
வாய்த்தால் வாயில்
போட்டுக்கலாம்
பொச்சடிக்கிறார்.

இவர் இருப்புக் கண்டு
இன்னுமொருவர்
வந்து சேர்ந்தார்
துணை தேடி வந்தாரோ
சுகித்திருக்க நினைத்தாரோ
இல்லை
இவருக்கும்
வயிற்றுப் பசிதானோ

மனிதனுக்குத்தான்
பெண்ணைக் கண்டால்
காலநேரமின்றிக்
காதலிக்கவும் தோன்றாது
காமம் கிளர்ந்தெழுகிறது.

பின்னொருமுறை
வீதி வலம் வரும்போது
கூடியிருந்தார்கள்
கூட்டமாய்
வேறொன்றுமில்லை !
காலியான அரிசி மூடையை
வீசியிருந்தார்கள் வீதியோரம்
ஓரிரு பருக்கையேனும்
கிடைக்குமா
தேடல் நடக்கிறது.

இவர் கொழு கொழுத்த புறாவாகும்
வசதியானவர்
கூடு கட்ட வேண்டியதில்லை
கூட்டுக் குடும்பமாக
கோயில் கூட்டில் வாசம்
இலவசமாகத்தான்.

பூசகரும் யாசகரும்
இறைவனுக்கு அர்ப்பணிப்பதில்
மிச்சமெல்லாம் இவர்கள்
வயிறு நிறைக்கும்

பசியிருந்து பட்டினி கிடந்து
குளித்து நோன்பிருந்து
நெற்றியிலும தொப்பையிலும்
நீறணிந்தாலும்
பக்கதனுக்கு கிடைக்காது வரம்
நோகாமல் அருகிருந்து
வயிறார ஆதரவு பெறுகின்றார்
தேடாத வரமாக

0..0.0.

மேகங்களே மேகங்களே இன்னும் தாமதம் ஏன்?

பதிவின் வடிவம்

மேகங்களே மேகங்களே
வெண் மேகங்களே வெண் மேகங்களே
விரைந்தெங்கே போகின்றீர்
பறந்து சோர்ந்த சிறகுகளுக்கு
ஓய்வு தேவையென
வேதனை மேவினால்
மலை முகடுகளில்
சற்று தரிந்திருங்களேன்.
Photo1300-001
வெண் மேகங்களே வெண் மேகங்களே
விரைந்தெங்கே போகின்றீர்
சூல்கொண்ட காற்று
சற்று அடங்கிவிட்டால்
நீங்களும் அசையாது நிற்பீர்
வேகங்கொண்டு விரைந்தடித்தால்
கால்களும் மனதை மீறி
வேகங் கொள்ளும்
Photo1301-001
மேகங்களே மேகங்களே
ஓய்நதது போதும்
ஓடிச் செல்லுங்கள்
காய்ந்த மாடாய் காத்திருக்கும்
மனத்தின் வேட்கையை
அவளிடம் சொல்லுங்கள்
Photo1299-001
மேகங்களே மேகங்களே
இன்னும் என்ன தாமதம்?

எம்.கே.முருகானந்தன்

0.0.0.00.0.0.0

வாடிய வாழையாக ….

பதிவின் வடிவம்

மடிந்து சரிந்து

மரத்திருந்து முறிந்து தொங்கி

காற்றின் திசை வழியே

சேர்ந்து அசையும்

வாடிய இலைகளின் அனுக்கம்

செவிப்பறைகளைத் தழுவவில்லையா?

கருகி உலர்ந்து

தரையில் சிதைந்து

விரைந்து மட்கி

மண்ணோடு மண்ணாகி

உருவிழந்து பெயரழிந்து

அழிந்து போவேனா?

உதவிக்கான கோரல்

ஏங்கி அணையும்

இறுதி மூச்சில்

மெளனிக்கின்றன.

SDC13850-002

கோயில் மடங்களிலும்

அந்தகார விடுதிகளிலும்

கெடுநெடி முடக்கும்

கொல்லைத் தாழ்வாரங்கிலும்

ஒடுங்கிக் கிடக்கும்

முதியோர் ஏக்க மூச்சுகளுடன்

இலைகளின் மரண மூச்சுடன்

கலந்து அடங்குகிறது.

எம்.கே.முருகானந்தன்

மறுபுறம் திரும்பிவிடு அன்பே!

பதிவின் வடிவம்

உச்சக் குரலெடுத்துப் பாடுவேன்
எந்நாளும் உன் வாழ்வில்
வசந்தம் பூக்கவென.
அன்பே!
வாழ்த்திசைப்பேன் தினந்தோறும்
உன்னாசைகள் நிறையவென

DSC03838-001

மோகம் முகிழ்ந்தெழ
ஆத்மாவின் உந்தலில்
சிறகடித்து பறந்து வந்து
உன்னருகே அமர்ந்தபோது
கண்டும் காணாத
புறக்கணிப்பில்
சிறகொடிந்த பறவையானேன்.

உடைந்து நொருங்கியது உள்ளம்.

மாஞ்சோலைகளிலும்
இலுப்ப வனங்களிலும்
இணையாகப் பறந்தோமே
சொண்டுகள் உரச
இறக்கைகள் போர்வையாக
குலவி மகிழ்ந்தோமே!
மறந்து போயினவா?
தேன் சிந்திய காலங்கள்

இருந்தும் மகிழ்கிறேன்
சத்தியமாய் மகிழ்கிறேன்
மரக்கிளைகளில்
மறைந்திருந்து
மற்றொரு இணையுடன்
சுகித்திருந்ததை
பாழ்விழிகள் பார்த்தபோதும்
மகிழ்கிறேன்
உன் ஆனந்தத்தில்
கரைந்தது
என் துயர்.

உச்சக் குரலெடுத்துப் பாடுவேன்
எந்நாளும் உன் வாழ்வில்
வசந்தம் பூக்கவென…..

இருந்தாலும்
மரணித்த காலங்கள் ஜனிக்காது
வலியெடுக்க உணர்கிறேன்.
தொல்லை கொடுக்க மாட்டேன்
வளைய சுற்றி வந்து
காதிற்குள் காதல்வரி
சொல்லவும் மாட்டேன்
இனி ஒருபோதும்.

வானத்தில் உலாவுகையில்
என்றாவது ஒரு நாள்
என்முகம் காண நேர்ந்தால்
மறுபுறம் திரும்பிவிடு
கண்ணீர் சிந்தும்
என்முகம் கண்டு
குற்றவுணர்வு
உனைத் தீண்டக்கூடாது
குதூகலம் குன்றக் கூடாது
உன் வாழ்வில்.

DSC03837-001

உச்சக் குரலெடுத்துப் பாடுவேன்
எந்நாளும் உன் வாழ்வில்
வசந்தம் பூக்கவென…..

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0