குறுநடை போடும்
செல்லக் குழந்தை
கடும் தரையது பாதம் நோகும்
விடு விடு என்றாலும்
விடாது நடைபோடும்
தடை எதும் அற்ற
மன ஓர்மம்
தடைபட விடாது
நடை பரவி
உலகளாவ
ஊக்கம் செய்வோம்.
எம்.கே.முருகானந்தன்
கார்த்திகை மாதம்
கருகிச் சாயும் மாலை
தீபம் ஏற்றும் திருநாள்
மாடித் தொடரின்
உச்சி முற்றத்தில்
காட்சி தந்தான்
தலைசாய்க்கும் ஆதவன்
அம்புலி எழுவான்
மறுதிசையில்
பூரணை நிலவாய்
சில கணங்களில்
தண்மையொளி
நீவி வருடும் உடலெங்கும்
நீத்தவர் நினைவுகள்
துளிர்தெழும் மனமெங்கும்.
காத்திருக்கத் தோதில்லை
நல்லதிற்குக் காலமில்லை
நினைவுகள் தடமழியும்
அவசர உலகிது
மனையாள் காத்திருப்பாள்
விளக்கடியில்
மங்கள விளக்கேற்ற…
மன்னியுங்கள்…
எம்.கே.முருகானந்தன்
0.00.0
சின்னப் பையன் நீ
மனிதனே
பூமி்த்தாயின்
கடைசி எச்சமாவாய்
அழகின் உச்சம் அவள்
வண்ண வண்ணங்களாய்
பற்பல உயிரினங்கள்
மாமலைபோல் உதித்தன
அவள் வயிற்றில்
தாவரங்கள்
பூச்சிகள் ஜந்துகள்
பறவைகள் மிருகங்கள்
கண்ணிற்கும் புலப்படா
அணுத்துளியின்
நுணுக்கம் முதல்
ஆல விருட்சமெனப்
பரவும் எங்கணும்
கவர்ச்சியான
உயிரியல் மாறுபாட்டின
எழிலான பிரதிபலிப்பு
அவளது மேனி.
அவளின் குழந்தைகள்
எவருமே
அவளின் ரம்யத்தை
அழிக்க முனையவில்லை
நீ மட்டுமே
அவளின் மேனியை
மாசுபடுத்துகிறாய்
நாளை நீ இல்லாது போகலாம்
ஆயினும் அவள் வாழ்வாள்
வேறு குழந்தைகளுடன்
நிச்சமாக
அழிக்க முனையாதே
அழிவாய் நீயே!
0.0.0
அனைவருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்
எம்.கே.முருகானந்தன்.
00.0.00