நாய் ஊளையோவென
நாற்புறமும் மேய வேண்டிய
தேவையில்லை
கண்களுக்கு
சீவிய முடி கலைந்ததே என
சோர்ந்து களைத்தன
கோதிய விரல்கள்
மேலணி அணியா மார்புகள்
ஆடைகள் தேடின
சீதளம் தணிக்க ..
வீசியது காற்று ஊழிப் பேரழிவாக….
கூட்டிப் பெருக்கிய முற்றதில்
பச்சிலைகளின் மாநாடு
சினக்க வைத்தது
இல்லத்தாளை
உலர்ந்த மண்ணின்
ஊர்வலத்து சிற்றெறும்புகள்
சுளித்தன நாவினை
வேம்பிலை கசப்பினால்
தலையில் பாளை விழுமோ
பயந்தடிக்க யாருமில்லை
முற்றத்தில்
வீசியது காற்று ஊழிப் பேரழிவாக….
மாடி வீட்டில்
மூடிய கண்ணாடி கதவுகளின்
பின்னே அடங்கிய மாந்தர்
மூழ்கி கிடந்தனர்
பேசும் திரைகளின்
முன்னே
முடங்கியது மனித வாழ்வு
கொரனா பீதியால்
வீசியது காற்று ஊழிப் பேரழிவாக….
சீறியது இயற்கை
அழிப்பர்களுக்கு
பாடம் புகட்ட
செவ்வாயில் கால் பதிக்கும்
அறிவாற்றல் ஆணவத்தால்
சூழலைச் சுரண்டியவன்
புதை குழி தோண்டுகிறான்
தனக்குத் தானே.
வீசியது காற்று ஊழிப் பேரழிவாக….
எம்.கே.முருகானந்தன்