Author Archives: Dr.M.K.Muruganandan

About Dr.M.K.Muruganandan

I am a family physician. Interested in literature, Art, cinema, health education etc

நுணா

பதிவின் வடிவம்

இது என்ன பூ எனத் தெரிகிறதா? முதற் பார்வையில் மல்லிகை பூ என்றே சொல்ல தோன்றும். ஆனால் இது மல்லிகை அல்ல.

சற்று தடிப்பமானது. மணமும் குறைவு.

நுணா மரம் (Morinda tinctoria) இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் வெப்ப பிரதேசங்களில் அதிகம் காணப்படுகிறது.

சுமார் 15 அடிக்கடி உயரம் வரை வளரக் கூடிய இந்த மரத்தின் உட்புறம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனால் மஞ்சணத்தி, மஞ்சள் நாறி, மஞ்சோனா பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

இந்த மரத்தின் பலகை கட்டில்கள் செய்யப் பயன்படுமாம்.நாரோட்டம் அதிகமாக இருப்பதால் இந்த மரம் வலிமையானது.

குங்குமச் சிமிழ், தெய்வச் சிலைகள் போன்ற கலைப்பொருள் இதனால் செய்யப்படும்

சங்க காலத்தில் இது தணிக்க மரம் என அழைக்கப்பட்டது. சங்க கால பெண்கள் குவித்து வைத்து விளையாடிய மலர்களில் இதுவும் ஒன்று.

இன்று கவனிப்பு இன்றி பயன்படுத்தலும் குறைந்து வருவதால் வளர்ந்த நுணா மரங்களை காண்பது அரிதாகி வருகிறது.

Advertisements

கைவிடப்பட்டவர்களும் கைவிடப்பட்டவையும்

பதிவின் வடிவம்

கைவிடப்பட்டவர்களும் கைவிடப்பட்டவையும்

கைவிடப்பட்டவர்களாக
கவனத்தில் எடுக்கப்படாதவர்களாக
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை
கழித்து வைத்திருக்கிறது அரசு
தம் இனக் கயவர்களை
காட்டிக் கொடாதிருந்து

கதிரை தக்க வைத்திருக்கும்
அரசியலுக்காக .

அதீத கவனம் எடுத்து
அவர்கள் துயர்களை
அணையவிடாது ஊதி பெருக்குவித்து
அவர்தம் கண்ணீரைப் பசளையாக்கி
தம் அரசியல் வாழ்வைத் தக்க வைக்கின்றன
தமிழ் அரசியல் கட்சிகள்.

காணாமல் ஆக்கப்பட்டோரை
காலனிடம் அனுப்பிவிட்டார்கள்
கயவர்கள்
என்ற உண்மையை மறைத்து
பொய்யான நம்பிக்கைகளில்
ஊற வைத்து
அவர்கள் துயர்களை ஆறவிடாது
தூண்டிக் கொண்டே இருப்பது நல்லதல்ல

காலம் துயர்களை அழிக்காது
எனினும் ஆற்றும்.

அவர்கள் வாழ்வு மலர கை கொடுங்கள்
அவர்கள் கண்ணீரில் மிதந்து
கதிரைகளில் ஏற முயலும்
அரசியல் கபடங்கள் வேண்டாமே.

எம்.கே.முருகானந்தன்

மொட்டை அடிக்கப் பட்ட ஒற்றை மரம்

பதிவின் வடிவம்

மொட்டை அடிக்கப் பட்ட
ஒற்றை மரம்
தன்னந்தனியனாக
நிமிர்ந்து நிற்கிறது

2018-01-11_06-10-35.jpg

செழித்து கிடப்பவனை
வெட்டி சிதைப்பது
குரூர மனங்களின்
கோணல் புத்தி.

வெட்டிச் சாய்த்தாலும்
புத்தம் புதிய துளிர்களுடன்
மீண்டும் செழிக்கும்
நிழல் தரும்
குழையும் கொடுக்கும்
குருவிகளும் குருவீச்சையம்
உண்டு களிக்கும் .

மொட்டை அடிக்கப் பட்ட
ஒற்றை மரம்
தன்னந்தனியனாக
நிமிர்ந்து நிற்கிறது
சாய்ந்து விடவில்லை
சாவும் நெருங்காது
தன்னை ஒறுத்து
சுற்றத்தை ஓம்புபவர்க்கு

எம்.கே.முருகானந்தன்

முன்னேசுவரம் ஆலயக் கல்வெட்டு

பதிவின் வடிவம்

முன்னேசுவரம் ஆலயக் கல்வெட்டு

புத்தளம் பகுதியில் உள்ள முன்னேசுவரம் ஆலயமானது மிகவும் பழமை வாய்ந்தது.
dsc08972
இலங்கையின் ஐம்பெரும் ஈஸ்வராலயங்களில் இதுவும் ஒன்று.

dsc08974

கோட்டை ராசதானி காலத்தில் மிகவும் பிரபல்லயமானதாக அறியப்படுகிறது.

இன்றும் மக்கள் ஆர்வத்தோடு அங்கு வழிபாடு செய்கிறார்கள்

பராக்கிரமபாகு முதலான பல மன்னர்கள் ஆதரித்து நன்கொடைகளும் அளித்துள்ளார்கள்.

dsc08986
இவை பற்றிய தகவல்கள் கல்லெட்டு சாசனங்களாகக் கிடைக்கின்றன.

கருவறையைச் சுற்றியுள்ள சுவரின் தென்பகுதியில் இக்கல்வெட்டுச் சாசனம் இருக்கிறது. தமிழில்.

இந்தக் கல்வெட்டில் இராமன் இவ்வாயத்தை வழிபட்டது பற்றியும் விஜயன் வணங்கியது பற்றியும் குறிப்பட்டப்பட்டதுடன் மன்னன் குள்ககோட்டுவனால் இந்த ஆலயத்திற்கு கொடுக்கபட்ட தாங்கள் பற்றியும் சொல்வதாக படித்தேன். உண்மை பொய் தெரியவில்லை. விடயம் அறிந்தவர்கள் தெளிவுபடுத்தலாம்

64 நாயன்மாருக்கும் விழா எடுக்கும் பெருமை கொண்டது முன்னீஸ்வரம் ஆலயம் ஒன்றுதான் எனச் சொல்லப்படுகிறது.

0.0.0

கொக்கைத் தடி (කෙක්ක:)

பதிவின் வடிவம்

கொக்கைத் தடி (කෙක්ක:)

எல்லாமும் எல்லோரும் தான் காலத்திற்கு ஏற்ப கோலம் மாறுகின்றன(ர்)

இவர் மட்டும் மாறமாட்டாரா?

அந்த நாளில் நாங்கள் மாங்காய் பிடுங்கவும் ஆட்டிற்டு குழை முறிக்கவும் முருங்கைக்காய் பறிக்கவும் கொக்கைத்தடியை பயன்படுத்துவோம்.

இன்றும் தான் பயன் படுத்துகிறோம். ஆனால் இன்று கொக்கைத்தடியார் நவீன் மோஸ்தரில் இருக்கிறார்.

நீண்ட நேரான நேர்த்தியான பூவரசம் தடியாகத் தேர்ந்தெடுத்து அதன் நுனியில் ஒரு சிறிய தடியை சாய்வாகக் கட்டினால் நல்ல கொளுவியாக அமையும்.

கொக்கைத்தடி தயாராகிவிடும்.

பூவரசம் தடிக்குப் பதிலாக கிளிசரியா தடியானால் பாரம் குறைவாக இருக்கும்.

கொளுவியாகவும் அதே நேரம் வெட்டவும் வேண்டுமானால் தடிக்குப் பதிலாக சத்தகக் கத்தியை கட்டுவோம்.

இன்று வேலிகளுக்கு பதிலாக மதில்கள் முளைத்து வருவதால் நீண்ட தடிகள் கிடைப்பது அரிதாகி வருகிறது.

இதன் காரணமாக தடிகளின் இடத்தை எஸ்லோன் பைப்புகள் பிடிக்கின்றன.

கொளுக்கி தடிகளுக்கு பதிலாக சிறிய இரும்பு கம்பிகளை பயன்படுத்துகிறார்கள்.

மரங்களும் மரங்களில் காய் கனிகளும் இருக்கும் வரை கொக்கைத் தடியின் தேவை இருக்கத்தானே செய்யும்.

கொக்கைத்தடி சிங்களதில் கொக்கா என்பார்கள். தமிழகத்தில் தொரட்டுக் கம்பு என்றழைப்பார்களாம்

ஆங்கிலத்தில் என்ன பெயர் சொல்லுங்களேன்.

நாறும் நாடு

பதிவின் வடிவம்

கொழும்பு நாறித்தான் கிடக்கின்றது
கேவல அரசியல் அழுக்கு நாடகங்களால் மட்டுமல்ல 

ஒழுங்காக அகற்றப்படாத குப்பை களாலும் தான்.

நேற்று இரவு W.A.Silva மாவத்தையில் உள்ள ஒரு தொடர் மாடிக் கட்டிடத்தின் முன் போக வேண்டிய தேவை ஏற்பட்டது.

வாந்தி வருமாற் போலிருந்தது. 

அக் கட்டத்தில்  இருந்து அகற்றப்படாத கழிவுகளால் ஏற்பட்ட நாற்றம் தான் காரணம்.

சுகாதார கேடுகள் பற்றி பட்டியல் போட்டு அடங்காது.

குப்பையை  அகற்ற முறையான கூட்டு முயற்சி எடுக்க முடியாத அரசினால், அரசியல் தீர்வு பற்றி நினைக்கவும் முடியுமா?

இருந்தாலும் குப்பை அகற்றுவது தொடர்பாக நம்பிக்கை கீற்று தெரிந்தது. 

இன்று காலை கண்ட காட்சி இது. 

பாகுபடுத்தி பிரித்து சேகரிக்கப்பட்ட கழிவுகளை அகற்றிக் கொண்டு இருந்தார்கள். 

மீள் சுழற்சி செய்யப்படக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களையும் கண்ணாடி பொருட்களை தனியாகவும், கடதாசி காப்போட் மட்டைகளை வேறாகவும் , ஏனையவற்றை தனியாகவும் அகற்றிக் கொண்டிருந்தார்கள்.

மக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து அவற்றை தனியாக பிரித்து அகற்றியதால் தானே இது சாத்தியமானது.

மக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்தது போல, அரசியல்வாதிகளும் தங்கள் பொறுப்பு களை உணர்ந்து செயல்படுவார்களா?

தேன் உண்ணும் வண்டு

பதிவின் வடிவம்

தேன் உண்ணும் வண்டு
செம் மலரைக் கண்டு
சிறகு மடித்திறங்கியது கண்டு
கண் விழித்தது
கைபேசிக் கமரா…
சிற்றெறும்பாரும்
பார்த்திருந்தார்.