Category Archives: Photos

மரணத்தின் பின் வாழ்வு

தரநிலை

மரணத்தின் பின் வாழ்வு

இறந்தும் இறப்புக்கு அப்பாலும் வாழும் வாழ்விது

வேதம் ஓதி, வெண் நூல் பூண்டு
நாதன் நாமம் செப்பி
காலனை விரட்டிய வாழ்வல்ல இது
இறந்தும் இறப்புக்கு
அப்பாலும் வாழும் வாழ்விது
மண்ணடி வேரின்
தலைநிமிர்த்தி உலகளத்தல்

0.0.0.0.0.0

Advertisements

இலைமீது படிந்திற்ற மாசகற்ற மழை நீரால் ….

தரநிலை

மாநாகரின் தெருநிறைத்து
வாகனங்கள்
பொழுதடங்க ஓடும்.
அது உண்டு கழித்திட்ட
கருவாயு குதம் பிரிந்து
வளி எங்கும் நோய் கொடுக்கப் பரவும்.

உயிர்வாழ
மாசுண்ணும் தாவரங்கள்
உயிர் வாய்வை
வளியெங்கும்
இரவெல்லாம் நிறைக்கும்.
அதைச் சுவாசிக்கும் உயிரினங்கள்
களிகொண்டு
பலவாகப் பெருகும்.

மிதந்தெழுந்த குளிர்காற்று
வெண்முகிலைத் தழுவ
சூல் கொண்டு கரு தாங்கி
மழைமேகம் ஆகும்.
அது பொழிந்த மழைநீரால்
பூவுலகு செழித்தோங்கி வாழும்.

தெருத்தூசி படிந்து அழுக்குறையும்
கொடி செடியின் மாசகற்ற
மழை நீரால் முடியும்.
அகமெங்கும் மாசுற்று
தூஷணையைப் பொழியும்
பாழ் மனம் தன்னைச்
சீர் செய்ய இங்கெவர்க்கு முடியும்?

மனதொடுக்கும் உளப் பயிற்சி
மனதூண்றிக் கைப்பிடித்தால்
உலகுள்ள உளமனைத்தும்
நிர்மலமாய் ஒளிரும்.

0.0.0.0.0.0.0

எம்.கே.முருகானந்தன்.

குரங்காட்டியும் குரங்கும்

தரநிலை

குரங்கும் குரங்கு மனமும்

குரங்கோடு இவன் அலைவான்
நகரடங்கக் குச்சொழுங்கை
தெருவெங்கும்
ஆங்காங்கே குரங்காட்டிப்
சிறுபிள்ளை கவர்ந்திழுக்க.
அப்பிளைப்ளில்
வழிதெருவில் சிறு காசேனும்
கைசேரல் பெரும்பாடாகும்.

நடையோங்கிக் குதி தேய்ந்து
புண்ணாகும் பாதம்
புழுதி தோய்ந்ததில்
குருதி மறைந்து கொள்ளும்.
ஒருபோதும் அரை வயிறும்
நிறையாத கிளிசறைப் பிழைப்பு
இருந்தாலும்
உயிர் பிழைக்க வேறு
வழியேதும் தெரியாது

இவனோடு நிதம் அலையும்
குரங்கிற்கும் கால் வயிறும் நிறையாது.
ஆனாலும்
காண்போரைக் கவர்ந்திழுக்கும்
அலங்காரத்தில்
குறைவேதும் இல்லை.

இருந்தாலும் சுயமாக
கெவர் பற்றி மரந்தாவி
கனிகவர்ந்து
விருப்போடு கொறிக்கும்
விடுதலைப்
பசியடங்கும்
காலம் கனிவதற்குள்
கதிமோட்சம்
கண்டிடுமோ?

எம்.கே.முருகானந்தன்

தென்னையும் பனையும் வேம்பும் வான் அளையக்..

தரநிலை

தென்னையும் பனையும்
நெடு வளர்ந்து
வேம்புடன் இணை சேர்ந்து
வான் அளையக் கை நீட்டும்.
மலைவேம்பு  இலையசைத்து
நலமா எனச் சுகம் கேட்கும்.
இலை சுருட்டிக் குழலாக்கி
விசில் ஊதப்
பூவரசு சிரசசைத்து
வரவேற்கும்

வெண்மேகம் திமிர் பிடித்து
விரைந்தோடும்
வான் எட்ட.
கைக்கெட்டாது ஒருபோதும்
அதுவென உணராது.
உயர்ந்தேகும் வெண் மஞ்சு
குளிர் காற்றால்
உடல் கறுத்துத்
தரையிறங்கும்.

தெருவெங்கும் பாய்ந்தோடும்
மழைநீரில் கால் அளைந்து
விளையாடிய காலமதில்
கடதாசி அகப்பட்டால்
அதை மடித்துக் கப்பலாக்கி
தொலைபயணம் புறப்படுவோம்
கற்பனைக் கடல் மீதே.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0.0

ஆண்டிது பிறக்கிறது 2012.

தரநிலை

2012 உதயம்

மார்கழித் திங்கள்
மதியொளி அடங்கி
காரிருள் மூழ்கி
புவியினை சூழ்வதைத் தடுக்க
ஆழியில் மிதந்து
அடிவானில் எழுந்து
நம் ஊரினில் மிதந்தான்
ஆதவன்
அன்றொரு நாள்.

வாழ்வினில் துன்பங்கள் அகலும்
நாளிது என்ற நம்பிக்கை ஊட்டும்
ஆண்டிது பிறக்கிறது 2012.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள்

0.0.0.0.0
எம்.கே.முருகானந்தன்

நீல் வானம் ஒதுங்கியோட மழை மேகம் கருக்கட்டும்

தரநிலை

நீல் வானில் கருமேகம் கருக்கொள்ளல்

நீல் வானம் மனதுடைந்து
ஒதுங்கியோட
நடு வானில் மழை மேகம்
கருக்கட்டும்.
அது கனிந்து மழைநீரைப்
பொழிந்தாலும்
இவர் வீட்டில் ஒரு சொட்டு நீரெனும்
தரையிறங்காது.
குழாய் நீர் மனமிரங்காத போது
அடிகழுவும் நீர் கூடச்
சொட்டாது
நகர் வாழ்வில் காசின்றி எதுவேனும்
கிட்டாது.

எம்.கே.முருகானந்தன்.

மறைந்திருப்பதின் சுவை

தரநிலை

Beauty of Concealment

மறைத்தலின் அழகு

ஒளிப்பின்றி வெளிச்சமிட்டுக்

காட்டலில் கிட்டுவதே இல்லை

சுவைத்தலும் அவ்வாறே

கும்மிருட்டில்

ஒளித்திருந்தும்

அதன் சுவை

தேனிலும் இனிக்கும்.

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0