Category Archives: Uncategorized

தீ மூட்ட மனசு வந்ததுவோ

பதிவின் வடிவம்

அறிவுத் தேடலுக்கான இடம்
அழகின் இருப்பிடமும் கூட

பச்சைக் கம்பளம்
பசுமைத் தாவர அடைப்புகள்
ஓங்கி வளர்ந்த விருட்சங்கள்
உதிர்ந்த மலர் தூவிய பாதைகள்
மஞ்சளும் சிவப்பும்
ஊதாவும் நீலமும்
கறைபடியா வெள்ளையுமான
மலர்கள்

மலர்களின் சுகந்தத்தை

சுமந்து வரும் காற்று

கூட்டங்கள் கூடல்கள்
எத்தனை இன்பம்
பொதிந்து வைத்தாய்
யாழ் பொது நூலகமே

எப்படித் தான் மனசு வந்தது
உனக்கு தீ மூட்ட ……

எம். கே.முருகானந்தன்

0.00.0

வீசியது காற்று ஊழிப் பேரழிவாக…

பதிவின் வடிவம்

நாய் ஊளையோவென
நாற்புறமும் மேய வேண்டிய
தேவையில்லை
கண்களுக்கு
சீவிய முடி கலைந்ததே என
சோர்ந்து களைத்தன
கோதிய விரல்கள்
மேலணி அணியா மார்புகள்
ஆடைகள் தேடின
சீதளம் தணிக்க ..

வீசியது காற்று ஊழிப் பேரழிவாக….

கூட்டிப் பெருக்கிய முற்றதில்
பச்சிலைகளின் மாநாடு
சினக்க வைத்தது
இல்லத்தாளை
உலர்ந்த மண்ணின்
ஊர்வலத்து சிற்றெறும்புகள்
சுளித்தன நாவினை
வேம்பிலை கசப்பினால்
தலையில் பாளை விழுமோ
பயந்தடிக்க யாருமில்லை
முற்றத்தில்

வீசியது காற்று ஊழிப் பேரழிவாக….

மாடி வீட்டில்
மூடிய கண்ணாடி கதவுகளின்
பின்னே அடங்கிய மாந்தர்
மூழ்கி கிடந்தனர்
பேசும் திரைகளின்
முன்னே
முடங்கியது மனித வாழ்வு
கொரனா பீதியால்

வீசியது காற்று ஊழிப் பேரழிவாக….

சீறியது இயற்கை
அழிப்பர்களுக்கு
பாடம் புகட்ட
செவ்வாயில் கால் பதிக்கும்
அறிவாற்றல் ஆணவத்தால்
சூழலைச் சுரண்டியவன்
புதை குழி தோண்டுகிறான்
தனக்குத் தானே.

வீசியது காற்று ஊழிப் பேரழிவாக….

எம்.கே.முருகானந்தன்

அதிசுதந்திர ஜீவிகள்..

பதிவின் வடிவம்

அதிசுதந்திர ஜீவிகள்..
38802853_10161012766160268_4085387593628254208_n
மந்த மாருதம் வீசும்
அந்தி மாலை நேரம்
தெரு விளக்குகள் மெல்லென
உயிர்த்தெழும் கோலம்

பூம் பூம் ஒலியெழுப்பி
இரு சில்லு வாகனங்கள்
உறுமிப் பறந்தோட
பறவைகள் போலவே
கூடு சேர்ந்து குலவி மகிழ்ந்திட
பறந்தோடும் மாந்தர்கள்.

புட்டியும் கையுமாக
புளித்த கள்ளின்
ஏப்பம் ஒலிக்க
அடுத்த போத்தலை
கையிலெடுக்கும்
பெருங் குடியர்கள்..

பொக்கற்றில் சில்லறையும் இன்றி
பயணிப்பதற்கு ரயிலுமின்றி
புகையிரத ஊழியரின்
தன்னல வேலை ஒறுப்பில்
வீடு செல்ல நாதியற்று
வீதியில் உறங்க வேண்டிய கதியில்
சீசன் டிக்கற் தொழிலாளர்கள்.

இம்மென்றால் ஸ்டிரைக்
அம்மென்றாலும ஸ்டிரைக்
மக்கள் பணத்தை உறிஞ்சி
மக்களுக்கே ஆப்பு வைக்கும்
அதி சுதந்திர ஜீவிகள்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

புளியங்கியான் சிதம்பர விநாயகர், வைரவர், முச்சந்தி விநாயகர்

பதிவின் வடிவம்

முச் சந்தியில் மோனத் தவம் இருக்கும் பிள்ளையார்.

புலோலி கொடிகாமம் வீதியில், கிழக்கே வல்லிபுரம் நோக்கி பிரியும் முச் சந்தியில் இவர் இருக்கிறார்.

ஆள் ஆரவாரம் இன்றி வெறித்துக் கிடக்கும் வெட்ட வெளியான இந்த இடம் துன்னாலை பகுதி என நினைக்கிறேன்.

தெருப் பிள்ளையார் என்ற போதும் மிகவும் அழகான சிலை.

பாவம் கொளுத்தும் வெயிலில் தகரக் கொட்டிலே இவரது ஆலயம்

கீழே சூலமும் அருகே சங்கும் சிட்டி விளக்குகளும் அவருக்கு துணையாக இருக்கின்றன.

இந்த இடத்தின் பெயர் என்ன? தெரிந்த வர்கள் சொல்லுங்கள்.

நன்றி
உடுவில் அரவிந்தன் புளியங்கியான் சந்தி என அறியத் தந்திருக்கிறார்.

இப் பிள்ளையாருக்கு வடமேற்கு புறமாக புளியங்கியான் சிதம்பர வினாயகர் ஆலயம் இருக்கிறது. அது ஒரு பழைமையான ஆலயம்.

பிள்ளையாருக்கு வடக்குப் புறமாக பரந்து வளர்நத ஆலமரத்தின் கீழ் ஒரு வைரவர் கோவிலும் உண்டு.

20170910_173506

 

பீடைகள்

பதிவின் வடிவம்

பீடைகளின் தொல்லை
அழிக்கிறது
நிதம் நிதம்
நெல்லினில் பீடை
வெங்காயதிலும் பீடை
கொய்யாவில்
தேசியில் தென்னையில்
தக்காளியில் வெண்டியில்
எதைத்தான் விட்டு வைத்தது
அகத்தி செடியிலும் கூட
வாசமிகு நந்தியாவட்டை
பூஞ்செடிக் குருத்துகளையும்
தின்று முடித்தது.

நாட்டைப் பிடித்த பெரிய பீடை
சிம்மாசனத்தில் ……
மூளை பிசகா என்ற சந்தேகம்
அனைவருக்கும்
அதற்கும் ஒரு வழக்கு
நீதிமன்றில்

தப்புமா இந்த மூளை கெட்ட
பெரிய பீடையிலிருந்து
நாடு

எம். கே.முருகானந்தன்

சுகம் காணல்

பதிவின் வடிவம்

 


ஈருடல் ஓருயிர்
என்றிவை பிணைந்து
ஆனந்த சாகரத்தில்
மூழ்கிய போதிலும்
பயன் என்?

சூழ் பறக்கும் வெந்தணலில்
உப்பு புளியுடன் வெந்து
மானிடர் நாசி துளைத்து
நாவினில் உமிழ் நீர் சுரக்க
பல்லிடை அரைபட்டு செரிமினம்
ஆதல் மட்டே!

மற்றவர் வாழ்வு சிறக்க
தன்னை ஒறுத்து
இழப்பதிலும்
உண்டு சுகம் என்பதும்
உண்மையே

எம்.கே.முருகானந்தன்

வெம்பிப் பழுத்ததில் விளையும் வினை

பதிவின் வடிவம்

வெம்பிப் பழுத்தவை

நிரம்பிக் கிடக்கின்ற ஊர் தோறும்
சந்தி தெருக்களில் திரள் திரளாக
முட்டி மோதி
இரட்டை சில்லில் சாகசித்து
முந்திச் சாகத் துடிக்கின்றன
தெரு வீதிகளில்.

வெட்டிப் பேச்சு புட்டித் திரவம்
வாய் நீளும்
உடம்பு வளையாது
வளர்த்த தேகம்
அப்பன் உழைத்த காசும்
உவன் பாவம் என
வந்து கொட்டும் டாலரும் பவுண்ஸ்சும்
இவனில் உருக்கொண்டு ஆடுகின்றன.

இன்னும் ஒரு பரம்பரை
இப்படியே ஆனால்
வெற்று பேச்சு
அரசியலுக்கு தேவையே இல்லை
இந்த மண்ணும்
இனிய மொழியும்
காணாமல் போனோர் பட்டியலில்
சேரும்.

எம்.கே.முருகானந்தன்

நுணா

பதிவின் வடிவம்

இது என்ன பூ எனத் தெரிகிறதா? முதற் பார்வையில் மல்லிகை பூ என்றே சொல்ல தோன்றும். ஆனால் இது மல்லிகை அல்ல.

சற்று தடிப்பமானது. மணமும் குறைவு.

நுணா மரம் (Morinda tinctoria) இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் வெப்ப பிரதேசங்களில் அதிகம் காணப்படுகிறது.

சுமார் 15 அடிக்கடி உயரம் வரை வளரக் கூடிய இந்த மரத்தின் உட்புறம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனால் மஞ்சணத்தி, மஞ்சள் நாறி, மஞ்சோனா பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.

இந்த மரத்தின் பலகை கட்டில்கள் செய்யப் பயன்படுமாம்.நாரோட்டம் அதிகமாக இருப்பதால் இந்த மரம் வலிமையானது.

குங்குமச் சிமிழ், தெய்வச் சிலைகள் போன்ற கலைப்பொருள் இதனால் செய்யப்படும்

சங்க காலத்தில் இது தணிக்க மரம் என அழைக்கப்பட்டது. சங்க கால பெண்கள் குவித்து வைத்து விளையாடிய மலர்களில் இதுவும் ஒன்று.

இன்று கவனிப்பு இன்றி பயன்படுத்தலும் குறைந்து வருவதால் வளர்ந்த நுணா மரங்களை காண்பது அரிதாகி வருகிறது.

கைவிடப்பட்டவர்களும் கைவிடப்பட்டவையும்

பதிவின் வடிவம்

கைவிடப்பட்டவர்களும் கைவிடப்பட்டவையும்

கைவிடப்பட்டவர்களாக
கவனத்தில் எடுக்கப்படாதவர்களாக
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை
கழித்து வைத்திருக்கிறது அரசு
தம் இனக் கயவர்களை
காட்டிக் கொடாதிருந்து

கதிரை தக்க வைத்திருக்கும்
அரசியலுக்காக .

அதீத கவனம் எடுத்து
அவர்கள் துயர்களை
அணையவிடாது ஊதி பெருக்குவித்து
அவர்தம் கண்ணீரைப் பசளையாக்கி
தம் அரசியல் வாழ்வைத் தக்க வைக்கின்றன
தமிழ் அரசியல் கட்சிகள்.

காணாமல் ஆக்கப்பட்டோரை
காலனிடம் அனுப்பிவிட்டார்கள்
கயவர்கள்
என்ற உண்மையை மறைத்து
பொய்யான நம்பிக்கைகளில்
ஊற வைத்து
அவர்கள் துயர்களை ஆறவிடாது
தூண்டிக் கொண்டே இருப்பது நல்லதல்ல

காலம் துயர்களை அழிக்காது
எனினும் ஆற்றும்.

அவர்கள் வாழ்வு மலர கை கொடுங்கள்
அவர்கள் கண்ணீரில் மிதந்து
கதிரைகளில் ஏற முயலும்
அரசியல் கபடங்கள் வேண்டாமே.

எம்.கே.முருகானந்தன்