சோர்வு கொள்ளும் ஆதவன்

பதிவின் வடிவம்

 ஆதவனும் தலை சாய்த்தான்

மீனவர் குடிலின் பின்புறத்தே 

சோர்வு உள்ளத்தில் 

குடி கொள்ள,

‘ஏது எப்படி இவர்களால் 

முடிகிறது.

நான் அயர்ந்து தூங்கும்

நள்ளிரவு தாண்டிய 

இரு மணிநேரத்தில் 

பாய் விரித்து படகோட்டி

குளிர் தோயக் கடல் உடுத்தி

வலை வீசும் 

இவர்கள் 

தொழில் நேர்த்தி 

என்னிடமில்லை 

யாரிடமும் கிடையாது.

தலை வணங்குகிறேன்

பணிவன்புடன் ‘

என்றவாறே..

காலை ஏழுக்கு  கண் திறந்து

கொட்டாவி 

ஊர் கூட்ட 

சோம்பல் முறித்து 

காப்பி அருந்தி 

சாப்பிட்டு 

மீண்டும் கண்ணயர்நது 

மதியக் குழம்பிற்கு 

மீன் வாங்க போவதற்கு 

சோம்பி தயங்கி

அறா விலைக்கு பேரம் பேசும் 

கூட்டத்திற்கு புரியுமா 

உழைப்பின் மேன்மை

எம்.கே.முருகானந்தன்

0.00.0

தீ மூட்ட மனசு வந்ததுவோ

பதிவின் வடிவம்

அறிவுத் தேடலுக்கான இடம்
அழகின் இருப்பிடமும் கூட

பச்சைக் கம்பளம்
பசுமைத் தாவர அடைப்புகள்
ஓங்கி வளர்ந்த விருட்சங்கள்
உதிர்ந்த மலர் தூவிய பாதைகள்
மஞ்சளும் சிவப்பும்
ஊதாவும் நீலமும்
கறைபடியா வெள்ளையுமான
மலர்கள்

மலர்களின் சுகந்தத்தை

சுமந்து வரும் காற்று

கூட்டங்கள் கூடல்கள்
எத்தனை இன்பம்
பொதிந்து வைத்தாய்
யாழ் பொது நூலகமே

எப்படித் தான் மனசு வந்தது
உனக்கு தீ மூட்ட ……

எம். கே.முருகானந்தன்

0.00.0

வீசியது காற்று ஊழிப் பேரழிவாக…

பதிவின் வடிவம்

நாய் ஊளையோவென
நாற்புறமும் மேய வேண்டிய
தேவையில்லை
கண்களுக்கு
சீவிய முடி கலைந்ததே என
சோர்ந்து களைத்தன
கோதிய விரல்கள்
மேலணி அணியா மார்புகள்
ஆடைகள் தேடின
சீதளம் தணிக்க ..

வீசியது காற்று ஊழிப் பேரழிவாக….

கூட்டிப் பெருக்கிய முற்றதில்
பச்சிலைகளின் மாநாடு
சினக்க வைத்தது
இல்லத்தாளை
உலர்ந்த மண்ணின்
ஊர்வலத்து சிற்றெறும்புகள்
சுளித்தன நாவினை
வேம்பிலை கசப்பினால்
தலையில் பாளை விழுமோ
பயந்தடிக்க யாருமில்லை
முற்றத்தில்

வீசியது காற்று ஊழிப் பேரழிவாக….

மாடி வீட்டில்
மூடிய கண்ணாடி கதவுகளின்
பின்னே அடங்கிய மாந்தர்
மூழ்கி கிடந்தனர்
பேசும் திரைகளின்
முன்னே
முடங்கியது மனித வாழ்வு
கொரனா பீதியால்

வீசியது காற்று ஊழிப் பேரழிவாக….

சீறியது இயற்கை
அழிப்பர்களுக்கு
பாடம் புகட்ட
செவ்வாயில் கால் பதிக்கும்
அறிவாற்றல் ஆணவத்தால்
சூழலைச் சுரண்டியவன்
புதை குழி தோண்டுகிறான்
தனக்குத் தானே.

வீசியது காற்று ஊழிப் பேரழிவாக….

எம்.கே.முருகானந்தன்

கறை படிந்த ……..

பதிவின் வடிவம்

கறை படிந்த கைகள்
கறை படிந்த மனது
கறை படிந்த வாழ்வு
கறை படிந்த நட்பு
கறை படிந்த காதல்

சுமப்பது எத்தனை எத்தனை
கறைகளை
எத்தனை கறைகள் படிந்த போதும்
அத்தனையும் அடியில் அமுக்கி
அப்பாவி மனிதனாக
ஊர் போற்றும் பெரியோனாக
அசாடபூதி வேடம் அத்தனையும் தரித்து
உத்தமனாக வலம் வரும் மனிதா

எத்தனை காலம்
வேடம் கட்டி ஆடப் போகிறாய்
பழுத்து விழும் காலம்
தொலைவில் இல்லை
மறந்து விடாதே.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

ஆடிகாற்றுக்கு அம்மியும் பறக்கும்

பதிவின் வடிவம்
அம்மன் கோயில்
கொடியேறியதும்
அறைந்து வீசும் சோழகம்
திருவாய் மலர்ந்தது
அல்வாய்ப் பெண்மணி
கிணற்றில் நீரும் வற்றும்
மேலதிக தகவலும்
அவளது
மாவிலை கொட்டும்
அள்ளி மாளாது
பாளைகள் விமானமாய் பறக்கும்
பயிர்கள் தீயும்
வீட்டுப் பெண்களின் ஓலம்.
புழுதி மழையில்
பொன்னாடை சூடித் திணறும்
பூமி.
வாழை முறிந்து நிலத்தில் தவள
முற்றாத காய்களும்
வெம்பிப் பழுத்தது
என் வீட்டுச் சோகம்.
‘ஆடிகாற்றுக்கு அம்மியும்
பறக்குமாம்’
சும்மாவா சொன்னார்கள்.
எம்.கே.முருகானந்தன்
0.00.0

அதிசுதந்திர ஜீவிகள்..

பதிவின் வடிவம்

அதிசுதந்திர ஜீவிகள்..
38802853_10161012766160268_4085387593628254208_n
மந்த மாருதம் வீசும்
அந்தி மாலை நேரம்
தெரு விளக்குகள் மெல்லென
உயிர்த்தெழும் கோலம்

பூம் பூம் ஒலியெழுப்பி
இரு சில்லு வாகனங்கள்
உறுமிப் பறந்தோட
பறவைகள் போலவே
கூடு சேர்ந்து குலவி மகிழ்ந்திட
பறந்தோடும் மாந்தர்கள்.

புட்டியும் கையுமாக
புளித்த கள்ளின்
ஏப்பம் ஒலிக்க
அடுத்த போத்தலை
கையிலெடுக்கும்
பெருங் குடியர்கள்..

பொக்கற்றில் சில்லறையும் இன்றி
பயணிப்பதற்கு ரயிலுமின்றி
புகையிரத ஊழியரின்
தன்னல வேலை ஒறுப்பில்
வீடு செல்ல நாதியற்று
வீதியில் உறங்க வேண்டிய கதியில்
சீசன் டிக்கற் தொழிலாளர்கள்.

இம்மென்றால் ஸ்டிரைக்
அம்மென்றாலும ஸ்டிரைக்
மக்கள் பணத்தை உறிஞ்சி
மக்களுக்கே ஆப்பு வைக்கும்
அதி சுதந்திர ஜீவிகள்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

புளியங்கியான் சிதம்பர விநாயகர், வைரவர், முச்சந்தி விநாயகர்

பதிவின் வடிவம்

முச் சந்தியில் மோனத் தவம் இருக்கும் பிள்ளையார்.

புலோலி கொடிகாமம் வீதியில், கிழக்கே வல்லிபுரம் நோக்கி பிரியும் முச் சந்தியில் இவர் இருக்கிறார்.

ஆள் ஆரவாரம் இன்றி வெறித்துக் கிடக்கும் வெட்ட வெளியான இந்த இடம் துன்னாலை பகுதி என நினைக்கிறேன்.

தெருப் பிள்ளையார் என்ற போதும் மிகவும் அழகான சிலை.

பாவம் கொளுத்தும் வெயிலில் தகரக் கொட்டிலே இவரது ஆலயம்

கீழே சூலமும் அருகே சங்கும் சிட்டி விளக்குகளும் அவருக்கு துணையாக இருக்கின்றன.

இந்த இடத்தின் பெயர் என்ன? தெரிந்த வர்கள் சொல்லுங்கள்.

நன்றி
உடுவில் அரவிந்தன் புளியங்கியான் சந்தி என அறியத் தந்திருக்கிறார்.

இப் பிள்ளையாருக்கு வடமேற்கு புறமாக புளியங்கியான் சிதம்பர வினாயகர் ஆலயம் இருக்கிறது. அது ஒரு பழைமையான ஆலயம்.

பிள்ளையாருக்கு வடக்குப் புறமாக பரந்து வளர்நத ஆலமரத்தின் கீழ் ஒரு வைரவர் கோவிலும் உண்டு.

20170910_173506

 

தலை சாய்க்க இடமொன்று

பதிவின் வடிவம்

தலை சாய்க்க
இடமொன்று தேடியலைவது
என்றென்றும் முடியாத
தொடர் கதை.

20180826_153322

தாயின் வயிற்றிலிருந்து
உந்தி வந்ததுமே
அவள் மடியில் தலைசாய்க்க
உந்தும் மனம்

போரின் வெந்தணலில்
வீடிழந்து ஊர் துறந்து
உற்றார் உறுவுகளும் அறுந்தொழிய
நாடும் இழந்து
தலை சாய்க்க
இடமொன்று தேடியலைந்தது
நம்மினத்தின்
துயர் சரிதம்

ஆசிரியரின் அறுவை தாங்காது
தலை சாயும்
மேசையில்
வாத்தியின் பிரம்பு
பதம் பார்க்கும் வரை

காதலியின் தோளில்
மறைவாகத் தலை சாய்த்தல்
சொர்க்கத்தில் சிறகு விரிய வைக்கும்

பிணிப் படுக்கையில்
முதுமைத் தலை சாய்த்தல்
விம்மி அழ வைக்கும்
தாங்க முடியா நரகம்

உற்றார் உறவினர் கதறியழ
பாடையில் தலை சாய்த்தல்
வாழ்வில் இனியொரு போதும்
பலிக்க முடியாத
இறுதி ஆனந்தம்.

எம். கே.முருகானந்தன்

(தலை சாய்க்க இடமொன்று தேடும் சருகின் புகைப்படம் யாழ் பொது நூலகத்தில்)

கடலோரம் காலதேவன்

பதிவின் வடிவம்

கடல் அலைகள் ஒய்யாரமாய் வீசும்
பளிங்கு மணலின் ஒத்தடத்தில்
பாதங்கள் சிலிர்க்கும்
ஒளிச்சு பிடிச்சு விளையாட்டில்
கோலங்கள் வரைந்து மகிழும்
சிறு நண்டுகள்
வண்ணத் தீந்தைகளை
வானில் அள்ளி வீசி
ஓளிர்வான் ஆதவன்
பிரித்தானிய
கடலோர கவலரண்களை
மண்ணில் புதைத்து
வெற்றிச் சிரிப்பில்
காலதேவன்.

அறுபதுகளில் சிறுவனாய்
இந்த மண்ணில் பாதம் பதித்தவன்
எழுபது வயதில்
பேரனின் மண்விளையாட்டில்
தன்னிலை மறந்து
ஆனந்த நடமாடினான்
நிலாவெளி கடற்கரையில்.

எம்.கே.முருகானந்தன்

0.00.0