நோய் தீர்க்கும் மருத்துவருக்கும் நோய் வந்ததே ஹா ஹா..

பதிவின் வடிவம்

‘நோய் தீர்க்கும் மருத்துவருக்கும்
நோய் வந்ததே’
நக்கலாய் சொல்லடுக்கி
நகையடக்கி முகம் பார்த்தார்
மருந்தெடுக்க வந்த நோயாளி.

வேறொன்றுமில்லை
அடக்க முயன்றும் மீறிச்
சீறியிருந்தது என் தும்மல்

நஞ்சுண்ட சிவனா நான்?
எந்நோயும் அணுகாதென
இறுமாந்திருக்க?
இரும்பால் ஆனதல்ல இவ்வுடல்
தசையும் இரத்தமும்
சருமமும் சளியும் உண்டெனக்கும்.

COLEUS AROMATICOS

அற்புதமான மூலிகை
இதன் பயனறிந்தால்
ஆச்சரியம் தாங்காதாம்.

சளி, ஜலதோஷம், இருமல் குணமாக்கும்
பற்றிட்டால் தலைவலை பறந்தோடும்
அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்
சிறுநோய்க் கோளாறு, மனநோய் மாறும்
தசை சுருங்காது, சருமம் மிருதுவாகும்
வாந்தி பறந்தோடும் என்றார்கள்.

பொக்கிசம் கிடைத்ததென
பசளையிட்டு பதமாக நீருற்றி
ஆசையோடு வளர்த்தேன்.
நன்றாக வளரும்
பிணி தீர்க்கக் கைகொடுக்கும்
என்றிருந்தேன்.

காலை கண் விழித்து
தோட்டத்தில் நோட்டமிட …
அந்தோ !!
ஓட்டை விழுந்து
அலங்கோலமாய் தளர்ந்த
இலைகளுடன் நாணியது
கற்பூரவல்லி.

நோய் தீர்க்கும் மருந்துக்கும்
பிணி வந்தடும்போது
மருத்துவர் என் செய்வார்
நோயும் பிணியும்
மூப்பும் மரணமும்
அவருக்கும்
நியதிதானே.

எம்.கே.முருகானந்தன்.

ஒரு மறுமொழி »

  1. “நஞ்சுண்ட சிவனா நான்?
    எந்நோயும் அணுகாதென
    இறுமாந்திருக்க?”

    “இரும்பால் ஆனதல்ல இவ்வுடல்
    தசையும் இரத்தமும்
    சருமமும் சளியும் உண்டெனக்கும்.”

    “நோயும் பணியும்
    மூப்பும் மரணமும்
    அவருக்கும்
    நியதிதானே.”

    ஐயா, தங்கள் ஒவ்வொரு வரியும் தனி கவிதை.
    தங்களின் படைப்பே தனி.
    மிகவும் ரசித்தேன்…
    அழகு…

  2. ‘நோய் தீர்க்கும் மருத்துவருக்கும்
    நோய் வந்ததே’

    நோய் தீர்க்கும் மருந்துக்கும்
    பிணி வந்தடும்போது
    மருத்துவர் என் செய்வார்
    நோயும் பிணியும்
    மூப்பும் மரணமும்
    அவருக்கும்
    நியதிதானே.

    ஆரம்பம் முடிவு இரண்டுமே அற்புதம்!

பின்னூட்டமொன்றை இடுக